புனித மாத புராட்டசி - ஒரு நாளைக்கு ஒரு செய்தி - கடவுளை நாம் பார்க்க முடியுமா?''
* எங்கே போனால் கடவுளை நாம் பார்க்க முடியும்?*
எதுக்குடா ராமுடு, உனக்கு இப்போ அந்த கவலை? இல்லை நிறைய அவரைப்பத்தி கேக்கிறதாலே பார்க்கணும்னு தோணறது' நமக்கு அவர் தானே எல்லா உதவியும் செய்கிறார் , கடவுள் ரொம்ப நல்லவர் என்று சொல்வாயே. நான் அவரைப் பார்க்கணுமே 10 வயது ராமுடு அம்மாவிடம் கேட்டான். இவனுக்கு என்ன பதில் சொல்வது திணறினாள் அம்மா.
என்ன பேசாமல் இருக்கிறாய். சீக்கிரம் சொல்லு. நான் எங்கே போய் நீ அடிக்கடி சொல்ற அந்த கடவுளை பார்க்க முடியும்..? திடீரென்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'கடவுள் தான் கிருஷ்ணனா இருக்கிறார். கிருஷ்ணனைப் பார்க்க வேண்டுமானால் அதோ அந்த ஆற்றங்கரை ஓரமாகவே ரெண்டு மணி நேரம் நடந்து போ, தூரத்தில் தெரிகிறது பார் ஒரு மலை.. அதன் மேல் ஒரு கோவிலில் கிருஷ்ணன் இருப்பான் போய்ப் பார்த்துட்டு வா.
அங்கு ஒரு கிருஷ்ணன் கோயில் இருப்பது தெரியும் அவளுக்கு அவளே சின்ன வயதில் அந்த மலைக் கோவிலுக்குச் சென்றிருக்கிறாளே. ராமுடு மறுநாள் காலை நிறைய கோதுமை சப்பாத்தி, ரொட்டிகளை பொட்டலம் கட்டிக்கொண்டு ஒரு பாத்திரத்தில் குடிக்க நீர் எடுத்துக்கொண்டு முதுகில் மூட்டையோடு மலையை நோக்கி நடந்தான்.எப்படியும் அரை நாளாவது பூரா நடந்தாக வேண்டும். நடந்தான். சூரியன் தலைக்கு மேல் வந்து விட்டது. இன்னும் பாதி தூரம் கூட கடக்கவில்லை. ரொம்ப களைத்துப்போய்விட்டான் . சரி எங்காவது இளைப்பாறலாம் என்று இடம் தேடியவன் கண்ணில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. அதன் அருகிலேயே ஒரு சின்ன தாமரைக் குளம் கூட இருந்தது சௌகர்யமாக போய்விட்டது. ராமுடு குளத்தங்கரையில் மரநிழலில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தான். அந்தக் குளத்தில் ஒரு வெள்ளை வாத்து தன் குஞ்சுகளோடு ஆனந்தமாக நீரில் மிதந்து கொண்டிருந்தது. பார்க்க அழகாக இருந்தது. கிழவர் அதைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்.
பசி வயிற்றைக் கிள்ள ராமுடு ஒரு ஓரமாகபோய் உட்கார்ந்து மூட்டையை அவிழ்த்தான்.எப்படித்தான் அந்த வெள்ளைஅம்மா வாத்து ரொட்டி வாசனை மோப்பம் முடித்ததோ. அவனுக்கு நெருக்கமாக குளத்தில் கரையோரமாக தனது குடும்பத்தோடு நின்று கொண்டிருந்தது. ராமுடுவுக்கு வாத்து குடும்பத்தைப்பார்த்ததில் சந்தோஷம். கொஞ்சம் ரொட்டியை துண்டுகளாக்கி தண்ணீரில் வீசினான். அம்மா வாத்து லாகவமாக அதைப்பிடித்து தானும் உண்டு தனது வாரிசுகளுக்கும் விட்டுக் கொடுத்தது. அவற்றின் சந்தோஷமான பாக் பாக் சப்தம் அந்த குளக்கரை அமைதியில் பெரிய சப்தமாக ஒலித்தது. நாலைந்து ரொட்டிகள் இப்படி துண்டாகி வாத்து குடும்பத்திற்கு ஆகாரமானது.
கிழவரின் கைதட்டல் ராமுடுவின் கவனத்தை ஈர்க்க அவரது ஒளி வீசும் முகம் பிரகாசிப்பதைக் கண்டான். அவருக்கும் ஒரு ரொட்டியைக் கொடுத்தான். பசி போல் இருக்கிறது அவருக்கும். ஆவலாக வாங்கி பல்லில்லாத வாயில் மென்று மென்று சாப்பிட்டார். ஒன்றுமே பேசவில்லை. தலையை ஆட்டினார். அவரது முகத்தில் ஒரு சாந்தமும் காந்த சக்தியும் இருந்தது எங்கேயோ பார்த்தமுகமாக தோன்றியது. ராமுடு யோசித்தான். ஆஹா. நமது வீட்டில் ஹாலில் இருக்கும் சீரடி சாய்பாபா முகம் மாதிரியல்லவா இருக்கிறது. அதே மாதிரி வெள்ளை தாடி, ருங்கின கன்னம் . கோடு கோடாக நெற்றி. ஆழமான அன்பு முகத்தின் சிரிப்பு அவனை வசீகரித்தது. கழுத்தை சாய்த்து தன் கையில் வைத்திருந்த ஒரு சிறு குச்சியால் உதடுகளைத் தட்டியபடியே தலையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்தார்.
ரொட்டியை மென்று தின்ற விதம் பிடித்தது. பசி கொஞ்சம் தீர்ந்தது போல் காணப்பட்டதால் மீண்டும் சில ரொட்டிகள் வாத்துகளுக்கும் கிழவருக்கும் கை மாறின. ரெண்டு மணி நேரமும் போனதே தெரியவில்லை. கொண்டுவந்த 18 ரொட்டியும் தீர்ந்து போய் விட்டது. வாத்து குடும்பம், வயதானவர் ராமுடு மூன்று பேரும் அதை தீர்த்துவிட்டனர். சந்தோஷம் அவனுக்கு. கிழவரும் வாத்துகளும் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை அளித்தன. கிழவரின் துடிப்பான அசைவு குமரனாக மலர்ந்த முகத்தோடு இருந்தது பிடித்தது. அவருக்கு பசி இல்லை இப்போது. வாத்துகளுக்கும் ரொட்டி மீனையும் புழுவையும் விட நல்ல உணவாக அமைந்தது. ஒரு வார்த்தை கூட கிழவர் அவனோடு பேசவில்லை. ஒருவேளை தமிழ் தெரியாதோ என்னவோ?.
பொழுது சாய்ந்து இருட்ட ஆரம்பித்தது. கையில் உணவோ தண்ணீரோ காலி. எனவே மலைக்கு போகும் உத்தேசத்தை ராமுடு விட்டுவிட்டான். வீடு திரும்பினான். அவன் மனம் பூரா குதூகலம். கிழவரும் எழுந்து போய்விட்டார். வாத்துகள் அங்கேயே வழக்கம்போல் இருந்ததன் காரணம் அது தான் அவற்றின் வீடு. மற்ற இருவரும் விருந்தாளிகள் தானே.
கிழவர் போகுமுன் ராமுடுவை இழுத்து அணைத்து கட்டி கன்னத்தில் முத்தமிட்டார். ஏனோ அவனுக்கும் அவரைப்பிடித்துவிட்டதால் அவரை கழுத்தில் கட்டிக்கொண்டான். இரவு வீடு திரும்பிய பையனை அம்மா கேட்டாள். என்னடா ராமுடு உனக்கு முகத்தில் இத்தனை சந்தோஷம். கிருஷ்ணனைப் பார்த்ததிலா?
இதற்குள் அவன் கண்கள் ஹாலில் அம்மா எதிரே இருந்த இருந்த ஷிர்டி பாபா படத்தை பார்த்தன. ஓஹோ வியாழன் என்பதால் அம்மா பாபாவை வழிபடுகிறாளா? அட அந்த கிழவர் சாயல் அப்படியே இருக்கிறதே. அதைவிட இன்னொரு அதிசயம் சுவற்றில் இருந்த கிருஷ்ணனின் படம் கண்ணில் பட்டதில் தெரிந்தது. கிருஷ்ணனின் கண்களின் காந்த சக்தி, வாயில் புல்லாங்குழல், சாய்ந்த தலை, கழுத்து இதெல்லாம் இப்போது தானே சற்று முன்பு பார்த்தோமே என்று யோசிக்க வைத்தது. ஆமாம் அந்த கிழவரின் கண்கள், அவர் தலையசைத்து வாயில் ஒரு குச்சியை தொட்டுக்கொண்டிருந்தது, மலர்ந்த முகம், சிரிப்பு எல்லாம் நினைவுத்திரையில் படமாக ஓடியது.
என்னடா கேட்கிறேன் சுவற்றைப்பார்த்து வாயைப் பிளந்துகொண்டு நிற்கிறாய்? கிருஷ்ணனைப் பார்த்தாயா.?'' ''ஆஹா நன்றாய்ப் பார்த்தேன் மா. , கிருஷ்ணனோடு நான் இன்று ரொட்டிகூட சாப்பிட்டேன்'' என்று அழுத்தமாக சொன்னான் ராமுடு . என்னடா சொல்கிறாய்?
அம்மா உனக்குத் தெரியுமா, கிருஷ்ணனின் சிரிப்பு இன்று என் மனதை கொள்ளை கொண்டது கண்களில் ஒரு விதமான ஒளி, உள்ளத்தை மயக்கும் பார்வை, பார்ப்பதற்கு கிழவராக இருந்தாலும் காந்த சக்தி அவரிடம் இருந்தது. என்னை ஸ்பரிசிக்கும்போது நான் எங்கோ போய் விட்டேன். கிருஷ்ணன் வாயால் பேசவில்லை. இருந்தாலும் என் மனத்தை நிரப்பிவிட்டார்.""
அந்த நேரத்தில் ஊருக்கு வெளியே எங்கோ ஒரு வீட்டில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர் ஹிந்தியில். ''எங்கே உன்னைக் காணோம் நாள் முழுதும்? எங்கே போய் இருந்தாய் வயசான காலத்தில் நேரத்தோடு வராவிட்டால் கவலையாக இருக்கிறதே'' என்றான் மகன் அப்பாவிடம்.
''இல்லை மகனே, பகவான் வசிக்கும் இடம் ஒன்றை பார்த்தேன். மகிழ்ச்சியில் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். இன்று பகவானோடு உணவும் சாப்பிட்டேன்.'' ''என்ன சொல்கிறாய் அப்பா? நீ பகவானோடு சாப்பிட்டாயா? ''ஆமாமடா மகனே, ஒரு விஷயம் சொல்லட்டுமா. அந்த பகவான் சின்னப் பையனாகத்தான் இருந்தான். நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்குப் பசி. அவன் தான் ரொட்டி கொடுத்தான். அவனை அணைத்தேன். உச்சி முகர்ந்தேன் கன்னத்தில் முத்தமிட்டேன். எனக்கு ரொம்ப சந்தோஷம். பேசவே தோன்றவில்லை. அவனை கண்ணாரப் பார்த்துக் கொண்டிருந்தேன். பேச்சு வரவில்லை.''
இப்போது புரிகிறது. நாம் எத்தனைமுறை, நம்மை வந்தடைந்த ஸ்பரிசம், புன்னகை, ஒரு வார்த்தை, ஒரு தலையாட்டல், தொடல், இதையெல்லாம் உதாசீனப்படுத்துகிறோம். மனிதர்களை வைத்து இவற்றை எடைபோடுகிறோம். அன்பைப் பார்ப்பதில்லை, கலப்பற்ற பாசம், நேசம் இதெல்லாம் கவனிப்பதில்லை. அப்படி நம் வாழ்வில் நம்மை வந்தடைந்த ஒவ்வொரு ஜீவனும் கிருஷ்ணனால் அனுப்பப்பட்டவர்களோ, அல்லது அவனேயோ தான். ஏதோ ஒரு காரணத்துக்கோ, ஒரு காரியத்துக்கோ, குறிப்பிட்ட காலத்திலோ தான் அவர்கள் நம்மிடம் வருபவர்கள். நம்மை இன்புறச் செய்பவர்கள். உண்மை தெரியாமல் அறியாமல் அவர்களை புறக்கணித்தது, வீடுதேடி வந்த தெய்வத்துக்கு கதவைச் சாத்தினது மட்டும் தான் நாம் செய்தது. உண்மைதானே?