நவராத்திரி தேவியர்
சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில்- குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன. அம்பிகையான பராசக்தியை சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என்ற பெயர்களில் நவராத்திரி காலங்களில் வழிபடுகிறார்கள்.
இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக- அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். அன்னையின் முதல் வடிவமான சைலபுத்ரி இமவான் மகளாகப் பிறந்து, கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை மணந்தாள். இந்த தேவியானவள் கையில் சூலத்துடன் காளை மாட்டின்மீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட மங்களகரமான வாழ்வு கிட்டும்; திருமணத்தடை நீங்கும்.
இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத் தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.
பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள். இவள் வெள்ளை ஆடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சிதருவாள். இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதிபிறக்கும்; எதையும் சாதிக்கும் சக்தி கிட்டும். இரண்டாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் "துர்க்காகாட்' படித்துறையில் கோவில் உள்ளது.
திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார். இந்த நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும்.
இந்த ஆட்டத்தின்போது கால்விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை சித்திரகாண்டா. இவள் பத்து கரங்கள் கொண்டவள். புலிமீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட தீயசக்திகள் அழியும்; மனதிற்கு சாந்தி கிட்டும். மூன்றாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது.
சிவபெருமான் பகலும் இரவும் கூடும் வேளையில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம். அப்போது இடக்கால் பெருவிரலால் இட்ட கோலத்தை சப்த ஒலிக்கோலம் என்பர். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா. எட்டுக்கரங்கள் கொண்ட இவள் வேங்கைமீது அமர்ந்திருப்பாள். சகல இடர்களையும் களைந்து செல்வம் தருபவள். நான்காம் நாள் வழிபடப்படும் இந்த அன்னைக்கு காசியில் சௌக் கடைத்தெரு பகுதியில் ஆலயம் உள்ளது.
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அனைவரையும் காக்கும்பொருட்டு சிவபெருமான் உண்டார். அப்போது ஆடிய புஜங்க தாண்டவத்தின்போது வரையப் பட்ட கோலம் புஜங்க கோலம். இதிலிருந்து ஸ்கந்தமாதா தோன்றினாள். சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கும் இந்த அம்பிகையை "வாகீஸ்வரி' என்றும் சொல்வர். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னையின் மடியில் ஆறுமுகப் பெருமான் குழந்தை வடிவில் அமர்ந்திருப்பார். இந்த தேவியை நவராத்திரி காலங்களில் ஐந்தாம் நாள் வழிபடுவர். புத்திர பாக்கியம் தருபவள் இவள். காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் இந்த அன்னைக்கு கோவில் உள்ளது.
பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது, அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே இது முனிதாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தின்போது சிவபெருமான் இருகால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. நான்கு கரங்கள் கொண்டவள். சிம்ம வாகனத்தில் தொடைமேல் கால்போட்டு அமர்ந்திருப்பாள். "சிம்மவாஹினி' என்றும் சொல்வர். ஆறாம் நாள் வழிபடப்படும் இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர். காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப் படுகிறாள்.
யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி சிவபெருமான் ஆடியது பூத தாண்டவம். இதிலிருந்து காளராத்ரி என்ற சக்தி வெளிப்பட்டாள். இவள் புலித்தோல் ஆடையணிந்து பயங்கரத் தோற்றத்தில் காட்சிதருவாள். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். இவளது வாகனம் கழுதை. இவளை வழிபட தீயவர்கள் அழிவர். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோவில் உள்ளது. ஏழாம் நாள் வழிபடப்படும் தெய்வம் இவள்.
தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களால் துன்பப்பட்டு சிவபெருமானை வேண்ட, இறைவன் அந்த அசுரர்களை அழித்த பின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். அப்போது இறைவன் வரைந்த கோலத்திலிருந்து "மகாகௌரி' என்ற அன்னை தோன்றினாள்.
நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ரிஷபத்தின்மீது அமர்ந்து திரிசூலம் ஏந்தி காட்சிதரும் இந்த தேவியை வழிபட பசிப்பிணி நீங்கும்; உடல் வளம்பெறும். இவளுக்கு காசி அன்னபூரணி ஆலயத்தில் சந்நிதி உள்ளது. இந்த தெய்வத்தை எட்டாம் நாள் வழிபடுகிறார்கள்.
கயிலைநாதன் சிருங்கார தாண்டவம் ஆடியபோது நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தினார். அப்போது தன் பாதங்களால் வரைந்த கோலத்திலிருந்து சித்திதாத்ரி என்னும் தேவி தோன்றினாள். ஆதிசக்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழுமுதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி என்று பெயர் பெற்றாள். தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் இவளை வழிபட முக்தி கிட்டும்.
ஒன்பதாம் நாள் வழிபடப்படும் இந்த அன்னை காசியில் "சித்திதாத்ரி சங்கடா' என்னும் கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.
மேற்கண்ட தகவல்களை காசி புராணம் விவரிக்கிறது. தென்னகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் வரிசையில் நவராத்திரி கொண்டாடுகிறோம்.
காசியில் உள்ளவர்கள், சிவபெருமான் ஆடிய தாண்டவத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்பது தேவியரின் சுதை விக்ரகங்களை வாங்கிவந்து கொலுவைப்பார்கள்.
பத்தாம் நாளை, பார்வதிதேவி மீண்டும் தாய் வீடான இமயத்திற்குச் செல்லும் நாளாகக் கொண்டாடுவர். அன்று சுதையினாலான அம்பாள் திருவுருவத்துக்கு அலங்காரம் செய்வர். கைகளில் வளையல்கள் அணிவித்து, கால்களுக்கு சிவப்பு சாந்து பூசி, மலர்களால் அலங்கரிப்பர். வேதவிற்பன்னரை வரவழைத்து சிறப்புப்பூஜை செய்வதும் உண்டு. பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு, தங்கள் சக்திக்கு ஏற்ப புடவை மற்றும் ரவிக்கைத் துணிகளை மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய், பழங்கள், இனிப்புப் பண்டங்களை அதற்குரிய வாழை மட்டைத் தட்டுகளில் வைத்து வழங்குவர்.
அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவம் கொலுவில் நடுநாயகியாகக் காட்சி தருவதால், அனைவரும் பக்திப் பாடல்களைப் பாடி மீண்டும் பூஜிப்பார்கள். பிறகு, பத்து நாட்களும் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் உருவச்சிலைகளை கங்கை நதியில் கரைத்து விழா கொண்டாடுவர்.
காசி வருண்காட் அருகில் துர்க்கா கோவிலிலுள்ள இந்தப் பத்து தேவியரின் பளிங்குச் சிலைகளுக்குப் பூஜைகள் செய்து நவராத்திரி விழாவினை பூர்த்திசெய்கிறார்கள்.'
நவராத்திரி விழா நல்வாழ்த்துக்கள் !!!
__._,_.___