புனித மாத புராட்டசி - ஒரு நாளைக்கு ஒரு செய்தி
கங்கைக்_கரை_ரகசியங்கள் - #காசி_மஹா_மயானம்
காசி நகரம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது என்றாலும், 'இறப்பு' என்பதற்கும் காசி நகரம் பிரசித்தமானது! இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் முதியவர்கள், ''கடைசி மூச்சை காசியில் விட்டால் மோட்சம் கிடைத்துவிடும்!'' என்ற நம்பிக்கையுடன் கூடும் ஒரே நகரம்! உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக, ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள்!
ஆனால், காசியில் இறப்புக்காக காத்திருப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை!
இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை!' என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது, காசி நகரம்!
இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள்!
துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை!
இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டிருக்கும் இடங்களில் ஒன்று 'மணிகர்ணிகா' பகுதியில் உள்ள ''கங்கா லாப் பவன்!'' பல ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வரர் ஒருவரின் பாட்டி, தனது இறுதி மூச்சை காசியில் விட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அவரைக் கொண்டு சென்ற உறவினர்கள், தங்க இடம் கிடைக்காமல் தவித்து எப்படியோ ஒரு இடத்தை தேடிப்பிடித்திருக்கிறார்கள். பாட்டி காலமான பின்பு, ''மோட்சம் தேடி வரும் ஏழைகள் தங்க எந்த இடமும் நிரந்தரமாக இல்லையே....'' என்று அவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள்.
கவலைப்பட்டவர்கள் செல்வச் சீமான்களாக இருந்ததால், அங்கிருந்த பொலிஸ் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து உயிரைத் துறக்க விரும்புகிறவர்களுக்கு உறைவிடமாக்கினார்கள். இதுவரை அங்கு தங்கியிருந்து 10 ஆயிரம் பேர் உயிர் துறந்திருக்கிறார்கள்! இப்போதும் பலர் அங்கே தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, 'எப்போது அழைப்பு வரும்...?!' என்று காத்துக்கிடக்கிறார்கள்! கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்! இன்னொன்று ''காசி லாப் முக்தி பவன்!''
ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன் தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டடத்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார். ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய... இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது! இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
முதியோர்கள் தினமும் கங்கையில் குளித்து, 'இறைவா எங்களை ஏற்றுக் கொள்' என்று கோரிக்கை வைக்கிறார்கள். நேபாள நாட்டு அரசும், முதியோர்கள் 30 பேர் தங்கி இருக்கும் ஓர் இடத்தை பராமரிக்கிறது! அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழியனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு! ''இங்கே சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் 'ராம-நாமத்தை', 'ஓம்' என்ற பிரணவத்தை சிவனே ஓதுகிறார்!'' என்பது ஐதீகம்.
__._,_.___